Navi Pillay awarded the 2026 Nobel Peace Prize
Navi Pillay, a person of Tamil descent, has been announced as the recipient of the 2026 Nobel Peace Prize. Multiple outlets have confirmed the announcement.
First reported 4 hours ago · latest update 3 hours ago
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இப்பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக நார்வேஜிய நோபல் பரிசுக் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ் தெரிவித்துள்ளார்.
நவநீதம் பிள்ளை ஒரு "உறுதியான தார்மீக நெறிமுறையைக் கொண்டவர்" என்று அவர் குறிப்பிட்டார்.
நவநீதம் பிள்ளை "சர்வதேச சட்டத்தின் வரம்பையும் தாக்கத்தையும் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளார்" என்று ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ் கூறினார்.
இந்த ஆண்டிற்கான வெற்றியாளரை அறிவிக்கும்போது, விதிவிலக்கான துணிச்சலுடன் செயல்பட்டு, "மிகவும் விரிவான உலகளாவிய சட்ட ஒழுங்குமுறை" உருவாக்கத்திற்கு நவநீதம் பிள்ளை வழிவகுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தென்னாப்பிரிக்காவில் ஆழமான பாகுபாட்டை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கிய அவரது நீண்டகாலப் பணியை நார்வேஜிய நோபல் பரிசுக் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ் பாராட்டினார்.
நவநீதம் பிள்ளை பல்வேறு நாடுகளையும் தலைவர்களையும் பொறுப்புக்கூற வைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் ஃப்ரைட்னஸ் குறிப்பிட்டார்.
சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுவதில் தனிநபர்கள் மற்றும் நாடுகளுக்கு உள்ள பொறுப்பை அவர் வலியுறுத்தியுள்ளதாக ஃப்ரைட்னஸ் கூறுகிறார்.
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
தனது உரையின்போது, சர்வதேச சட்ட அமைப்பு பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "அதிகார அரசியல்" (power politics) என்று தான் குறிப்பிடும் ஒரு சூழலை நோக்கி உலகம் மாறி வருவதாகவும் தெரிவித்தார்.
"நீதியை விட வலிமை மேலோங்கும்போது, அது ஸ்திரத்தன்மையைக் குலைக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
நீதி மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு, அமைதியான உலகை உருவாக்க விரும்பும் அனைவருக்கும் நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் ஊற்றாகத் திகழ்கிறது என்று கூறி நார்வேஜிய நோபல் பரிசுக் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரான நவநீதம் பிள்ளையை தங்களது குழுவால் இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஃப்ரைட்னஸ் கூறினார்.
"எனவே, அவருக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி இதுதான். 'நார்வே தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வருவதை நீங்கள் கண்டால், தயவுசெய்து அழைப்பை ஏற்கவும்'. நான் உங்களுடன் மிக விரைவில் பேச விரும்புகிறேன்," என்று அவர் சிரித்தபடியே கூறுகிறார்.
தமிழகத்தைப் பூர்வீகக் கொண்ட தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சட்ட அறிஞரான நவநீதம் பிள்ளை அமைதி, சர்வதேச சட்டங்கள், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக தனது வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1941ஆம் ஆண்டு பிறந்த நவநீதம் பிள்ளைக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை ஐநா மனித உரிமை ஆணைய தலைவராக இருந்துள்ளார்.
1967ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தனது சொந்த மாகாணமான நேட்டலில் சட்டம் பயிலத் தொடங்கிய முதல் பெண்ணாக அவர் அறியப்படுகிறார். அடுத்த சில ஆண்டுகளில், இனவெறி ஆட்சி எதிர்ப்பு செயற்பாட்டாளர்களுக்கு வழக்கறிஞராகச் செயல்பட்டு, பல சித்திரவதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். ராபன் தீவிலுள்ள கைதிகளுக்கான முக்கிய உரிமைகள் நிறுவப்படுவதற்கும் அவர் உதவினார்.
அவர் க்வாஸுலு-நேட்டல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் டர்பன் வெஸ்ட்வில் பல்கலைக்கழக கவுன்சிலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1995ஆம் ஆண்டு, இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, தென்னாப்பிரிக்க உயர்நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அங்கு மொத்தம் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அவர், கடைசி நான்கு ஆண்டுகள் அதன் தலைவராகவும் இருந்தார். பாலியல் வன்முறையை இனப்படுகொலையாக அங்கீகரித்த முன்னோடி சட்டத் தீர்ப்புகள், கருத்துச் சுதந்திரம், வெறுப்பைத் தூண்டும் பிரசாரம் போன்ற விஷயங்களில் அந்தத் தீர்ப்பாயம் உருவாக்கிய முக்கிய சட்டவியல் முன்னேற்றங்களில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. 2003ஆம் ஆண்டு, ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை மேல்முறையீட்டு அமர்வில் பணியாற்றினார்.
தென்னாப்பிரிக்காவில், பெண்களின் தேசிய கூட்டணியின் உறுப்பினராக இருந்த அவர், இனம், பாலினம், மதம், பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடை செய்யும் சமத்துவப் பிரிவு அந்த நாட்டின் அரசியலமைப்பில் சேர்க்கப்படுவதில் பங்காற்றினார்.
பெண்களின் உரிமைகளுக்காகச் செயல்படும் சர்வதேச அமைப்பான 'ஈக்வாலிட்டி நவ்' (Equality now) அமைப்பின் இணை நிறுவனரானார். குழந்தைகள், சிறைக் கைதிகள், சித்ரவதைக்கு உள்ளானவர்கள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் தொடர்பான பிரச்னைகளில் பணியாற்றும் பிற அமைப்புகளுடனும் இணைந்து செயல்பட்டார்.
நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் நேட்டல் பல்கலைக் கழகத்தில் கலை மற்றும் சட்டத்தில் பட்டங்களைப் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சட்ட முதுநிலைப் பட்டம், சட்ட அறிவியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு
2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hours agoதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - DinaMani
தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! DinaMani
3 hours agoஅமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு - Vikatan
அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு Vikatan
4 hours ago