Developments in the Gem Veeramani sexual assault case
The arrest of a former employee for allegedly possessing a video on a mobile phone has intensified political friction between the TVK and DMK parties. Political figures are questioning the origins of the evidence and the stance of other parties regarding the case.
First reported 1 day ago · latest update 2 hours ago
எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் சங்கடம் தரலாம்
சென்னையில் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி உள்பட மூன்று பேரை கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி காவல்துறை கைது செய்துள்ளது.
வழக்கில் நான்காவதாக, கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 'காணொளி குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை' என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
வீரமணி கைது விவகாரம் தொடர்பாக த.வெ.க மற்றும் தி.மு.க இடையே மோதல் வலுத்து வருகிறது. தங்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறிய கருத்தை, அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 40 ஆண்டுகளாக ஜெம் கிரானைட் நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை ஆர்.வீரமணி நிர்வகித்து வருகிறார்.
இவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, சென்னை மாநகர காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர், கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி காவல்துறையில் அளித்த புகார் இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.
அவர் அளித்த புகார் மனுவில், அலுவலகத்தில் தான் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பென் டிரைவ் (pen drive) மற்றும் செய்தி அடங்கிய உறை ஒன்றை தன்னிடம் வழங்கியதாகக் கூறியிருந்தார்.
இந்தப் புகார் மனு மத்திய குற்றப் பிரிவின் அப்போதைய கூடுதல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் அதே ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், 'காணொளியில் உள்ள நபரைப் பற்றிய தகவல்களைக் கண்டறிய முடியவில்லை' எனக் கூறி கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், 'குறிப்பிட்ட தோற்றத்தில் உள்ள நபரைப் பற்றி ரகசியமாக புலனாய்வு செய்து அவரைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தகவல்கள் எதுவும் கண்டறிய முடியவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
சர்ச்சைக்குரிய காணொளி 2019-ஆம் ஆண்டில் பதிவானதாக காவல்துறையின் அறிக்கை கூறுகிறது.
'சந்தேகத்துக்குரிய இடத்தில் இருந்த டிவிஆரை (Digital Video recorder) சைபர் தொழில்நுட்ப நிபுணர் சோதித்தார். ஆனால், ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டதால் அடிப்படைப் பதிவுகள் எதுவும் இல்லை' எனக் கூறிவிட்டார்' எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வழக்கின் நடவடிக்கையை முடித்துக் கொள்வது தொடர்பாக சான்றிளிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட காவல்துறை, 'வரும்காலத்தில் ஏதேனும் ஆதாரமோ சாட்சியமோ கிடைக்கப்பெற்றால் நீதிமன்ற உத்தரவுப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தது.
இதனை ஏற்க மறுத்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா சண்முகசுந்தரம், 'காணொளி இருந்தும் ஏன் கண்டறிய முடியவில்லை?' எனக் கேள்வியெழுப்பி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார்.
'சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்த வேண்டும்' எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, தொடர்புடைய இடங்களில் காவல்துறை சோதனை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
போக்சோ நீதிமன்ற நீதிபதி பத்மாவின் உத்தரவால் இந்த வழக்கு வேகம் எடுத்ததாகக் கூறுகிறார், குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குழந்தைகள் நல ஆர்வலர் அளித்த புகாரில் முறையாக விசாரணை நடத்தியிருந்தால் கடந்த அக்டோபர் மாதமே கைது நடவடிக்கையை எடுத்திருக்க முடியும்." என அவர் குறிப்பிட்டார்.
ஜெம் கிரானைட் அதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் மூவரும் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டை வாடகைக்கு எடுத்து சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீரமணி மீது குற்றம் சுமத்தி காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் தேவநேயன், "குறிப்பிட்ட இடங்களில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். பல ஆண்டுகளாக தவறுகள் நடந்துள்ளதை அறிய முடிகிறது." எனக் கூறுகிறார்.
வழக்கின் மேலதிக விவரங்கள் குறித்து மாநகர காவல்துறையின் உயர் அதிகாரிகள் பிபிசி தமிழிடம் வெளிப்படையாக பேசுவதற்கு முன்வரவில்லை.
இதுதொடர்பாக, மத்திய குற்றப்பிரிவின் ஓர் அங்கமான பாலியல் குற்றத் தடுப்புப் பிரிவு செவ்வாய்க் கிழமையன்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், வீரமணியின் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து தற்போது வேறொரு நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவர் தனது செல்போனில் சர்ச்சைக்குரிய காணொளியை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
காணொளி குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காத குற்றத்துக்காக கணேசனை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்துள்ளதாக மத்திய குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
கணேசனுக்கு காணொளியை அனுப்பியது யார் என்பது குறித்தும் காவல்துறைக்குக் காணொளி குறித்து தெரிவிக்காமல் வைத்திருந்த பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை கூறியுள்ளது.
வீரமணி மீதான வழக்கின் விசாரணையை தி.மு.க ஆட்சிக்காலத்தில் மூடி மறைத்ததாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் குற்றம் சுமத்தினர்.
திங்கள்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "காணொளி ஆதாரங்கள் இருந்தும் யார் சொல்லி விசாரணையை நிறுத்தினார்கள்? அப்போது சட்டம் ஒழுங்கை கவனித்தது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான். அவருக்கு இதுபற்றித் தெரியாதா?" எனக் கேள்வியெழுப்பினார்.
"வீரமணி தொடர்புடைய வழக்கின் விசாரணையில் எந்தவித குறைபாடுகளும் இருக்காது" எனக் கூறிய சி.டி.ஆர்.நிர்மல்குமார், "தி.மு.க ஆட்சியில் நடந்ததற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க மீது வீண் பழி சுமத்தப்படுவதாக, முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறவில்லை. ஆதாரங்கள் கிடைத்த பிறகு வழக்கு தொடரப்படும் என்று தான் சொல்லியிருக்கிறோம்" என அவர் குறிப்பிட்டார்.
புதிய ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற குறிப்பாணையை போக்சோ நீதிமன்றத்தில் கடந்த தி.மு.க அரசின் காவல்துறை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி குழந்தைகள் நல ஆர்வலர் அளித்த புகார் குறித்துப் பேசிய ரகுபதி, " நாங்கள் காலம் தாழ்த்தியிருக்கலாம். ஆனால், உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது" என்கிறார்.
"போக்சோ வழக்கில் எந்தத் தகவலையும் கசியவிடக் கூடாது. ஆனால், அமைச்சர்கள் செய்தியை கசியவிடுகின்றனர். அது குற்றவாளி தப்பிப்பதற்கு உடந்தையாக இருக்கும்," எனவும் ரகுபதி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக எந்தப் போராட்டத்துக்கும் தயார். யாருக்கும் உடந்தையாகவும் உறுதுணையாகவும் நாங்கள் இல்லை" எனக் கூறுகிறார்.
வழக்கை தி.மு.க அரசு மூடிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த ரகுபதி, "காணொளியில் முகம் தெளிவாக இல்லை. விசாரித்து நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருந்தோம். வழக்கை மூடவில்லை" என்கிறார்.
"நாங்கள் யாரையும் காப்பாற்றவில்லை. ஆதாரம் இருந்தால் தான் கைது செய்ய முடியும். ஆதாரம் கிடைக்காத காரணத்தால் கைது செய்ய முடியவில்லை. பணம் வாங்கிக் கொண்டு வெளியில் விட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் மீது வீண்பழி சுமத்த வேண்டாம்" எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
ரகுபதியின் விளக்கத்துக்குப் பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், "காணொளி துல்லியமாக இல்லை என ரகுபதிக்கு யார் கூறினார்?" என அவர் கேள்வி எழுப்பினார்.
வீரமணியைக் காப்பாற்றும் முயற்சியில் ரகுபதி ஈடுபட்டுள்ளதாகக் கூறிய சி.டி.ஆர்.நிர்மல்குமார், "வழக்கின் விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. விசாரணை துரிதப்படுத்தப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.
"முன்பு வழக்கைக் கிடப்பில் போட்டதில் காவல்துறைக்கு தொடர்புள்ளதா?" எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, "யாருக்கு தொடர்பு இருந்தாலும் முதலமைச்சர் தப்பிப்பதற்கு விட மாட்டார்" என சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதில் அளித்தார்.
"சென்னையைத் தவிர தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் தவறுகள் நடந்ததா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" எனக் கூறுகிறார், குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன்.
வழக்கில் அரசியல் மற்றும் காவல்துறை தலையீடுகள் இருந்ததாக தகவல் வெளியாவதை மேற்கோள் காட்டிப் பேசும் அவர், "சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும். அப்போது தான் உரிய நியாயம் கிடைக்கும்" எனக் குறிப்பிட்டார்.
கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் தரப்பில் விளக்கம் பெறும் முயற்சிகளில் பிபிசி தமிழ் ஈடுபட்டது.
ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. அவர் தரப்பில் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் இக்கட்டுரையில் சேர்க்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கு: செல்போனில் 'காணொளி வைத்திருந்த' முன்னாள் ஊழியர் கைது
வீரமணி கைது விவகாரம் தொடர்பாக த.வெ.க மற்றும் தி.மு.க இடையே மோதல் வலுத்து வருகிறது. தங்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறிய கருத்தை, அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.
2 hours agoவீரமணி பாலியல் வழக்கு: ``கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?" - அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி - Vikatan
வீரமணி பாலியல் வழக்கு: ``கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?" - அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி Vikatan
1 day agoஜெம் வீரமணி வழக்கு: "வீடியோ 'ஷேடோவாக' இருந்தது ரகுபதிக்கு எப்படி தெரியும்?" - நிர்மல் குமார் கேள்வி - News18 Tamil
ஜெம் வீரமணி வழக்கு: "வீடியோ 'ஷேடோவாக' இருந்தது ரகுபதிக்கு எப்படி தெரியும்?" - நிர்மல் குமார் கேள்வி News18 Tamil
22 hours ago